கும்பகோணத்தில் சாலையின் நடுவே இருந்த மின்கம்பங்கள் சாலையோரத்துக்கு மாற்றம் :
கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள 60 அடி சாலை, ஜாகிர் உசேன் சாலை, பெசன்ட் சாலை, லால்பகதூர் சாஸ்த்ரி சாலை ஆகிய சாலைகளின் நடுவே மின்கம்பங்களில் தனியார் விளம்பரம் செய்ய ஏதுவாக, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு சாலையும் 3 சாலைகளாக பிரிக்கப்பட்டது. இதனால், சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, விபத்துகளும் நேரிட்டன.
இதையடுத்து, இந்தச் சாலைகளை பழையபடி அகலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன்பேரில், 3 ஆண்டுகளுக்கு முன்பு எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தனது சொந்த நிதி ரூ.5 லட்சத்தில் பெசன்ட் சாலையின் நடுவே இருந்த மின்கம்பங்களை அகற்றி, சாலையோரத்தில் அமைத்து, சாலையை அகலப்படுத்தினார்.
தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கும்பகோணத்தில் லால்பகதூர் சாஸ்திரி சாலை, 60 அடி சாலை, ஜாகிர் உசேன் சாலை ஆகியவற்றின் நடுவே இருந்த மின்கம்பங்கள், தடுப்புச் சுவர்களை அகற்றும் பணி நகராட்சி சார்பில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து, சாலைகள் பழையபடி அகலப்படுத்தப்பட்டு, சாலைகளின் ஓரங்களில் புதிதாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றை மக்களின் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நேற்று முன்தினம் இயக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுப.தமிழழகன், பெருமாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கே.பாஸ்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
