

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் 17.71 லட்சம் பனை விதைகளை நடவு செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இச்சாதனை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளுக்குட்பட்ட 993 இடங்களில் உள்ள சாலையோரங்கள், கண்மாய் கரைகளில் பனை விதைகள் நடப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சேர்ந்த 1,45,245 பணியாளர்கள் பனை விதைகளை நட்டனர். நேற்று 12 மணி நேரத்தில் 17,71,840 பனை விதைகள் நடப்பட்டன. முன்னதாக இதற்கான தொடக்க விழா ராமநாதபுரம் அருகே கழுகூரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இச்சாதனை நிகழ்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சாதனை நிகழ்வை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி அமீத் கே.ஹிங்கரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி எம்.சாந்தாராமன், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் இணை ஆசிரியர் பி.ஜெகநாதன், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நாட்டில் எந்த மாவட்டமும் செய்திராத இந்த சாதனையை பாராட்டி, ‘அதிகமான பனை விதை நடும் உலக சாதனை’ என அங்கீகாரம் அளித்ததுடன், சான்றிதழையும் அளித்தனர்.