Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

தூத்துக்குடியில் 9 மாத குழந்தை விற்கப்பட்ட சம்பவம் - ரூ.3 லட்சத்துக்கு வாங்கிய நாகர்கோவில் தம்பதி கைது : தாய் உள்ளிட்ட மேலும் 6 பேரை பிடிக்க நடவடிக்கை

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 9 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். குழந்தையின் தாய் உள்ளிட்ட மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவருக்கும், தூத்துக்குடி கொத்த னார் காலனியைச் சேர்ந்த ஜெபமலர் (28) என்பவருக்கும், கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 9 மாத ஆண் குழந்தையை ஜெபமலர் வளர்த்து வந்தார்.

ஜெபமலருக்கு வேறு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அந்த திருமணத்துக்கு குழந்தை தடையாக இருக்கும் என்று கருதி, அந்த ஆண் குழந்தையை விற்பனை செய்ய ஜெபமலரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். கடந்த 23-ம் தேதி ஜெபமலர், தனது சகோதரர் அந்தோணி, தாய் கிருபா, தந்தை செல்வராஜ், உறவினர் டேனியல் ஆகியோர் மூலம், திருமண தரகர்களான ஜேசுதாஸ், கார்த்திகேயன் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள்மூலம், நாகர்கோவில் மேலசூரங்குடியைச் சேர்ந்த செல்வமணி (52), தேவி (40) தம்பதியினரிடம், ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்தனர்.

இத்தகவல் அறிந்த மணிகண்டன், தனது குழந்தையை மீட்டுத் தருமாறு தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஏஎஸ்பி சந்தீஷ் மேற்பார்வையில், சிப்காட் காவல்ஆய்வாளர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

குழந்தையை விலைக்கு வாங்கிய மேலசூரங்குடியைச் சேர்ந்த செல்வமணி, அவரது மனைவி தேவி, அதற்கு உதவியாக இருந்த ராஜபாளையம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த குழந்தை மீட்கப்பட்டது.

குழந்தையை விற்பனை செய்த ஜெபமலர், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல், மற்றொரு தரகர் ஜேசுதாஸ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உரிய விசாரணைக்கு பிறகு குழந்தையை தந்தையிடம் ஒப்படைப்பார்கள். இத்தகவல்களை எஸ்பி ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறும்போது, ``திருமணத்துக்கு தடையாக இருந்ததால் குழந்தையை விற்றுள்ளனர். குழந்தையை விற்றவர்கள் மீது வேறு எந்த வழக்கும் கிடையாது. குழந்தையைத் தத்தெடுக்க வழிமுறைகள் உள்ளன. அதனைப் பின்பற்றியே தத்தெடுக்க வேண்டும். குழந்தையை விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x