

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் பயன்பாட்டுக் காக மட்டும் உருவாக்கப்பட்ட இ-சேவை சிட்டிசன் லாக்கின் மூலம், 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள், 6 வகையான முதியோர்உதவித்தொகை திட்டங்களுக்கு, பொதுமக்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த வசதியை, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்கள் பயன்படுத்தி, பொதுமக்களிடம் அதிக கட்டணம் பெறுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. தனியார்கணினி மையங்களில் பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்தாலோ, விளம்பரப்பலகைகள் வைத்தாலோ அபராதம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோல், இ-சேவை மையம் நடத்தஅரசு உரிமம் பெற்றுள்ள தனியார் கணினிமையங்களில் கூடுதல்கட்டணம் வசூல் செய்வது தெரிய வந்தால், அந்த மையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.60, ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.10, நிதியுதவி கோரும் திட்டங்களுக்கு ரூ.120, இணையவழி பட்டா மாறுதலுக்கு ரூ.60 வீதம் அரசால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட அதிக கட்டணம் வசூல் செய்தால், tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004251333 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் மூலமோ தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் இடைத்தரகர்களைத் தவிர்த்து, வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் அமைந்துள்ள அரசு பொது இ-சேவை மையங்களை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.