தூத்துக்குடி மாவட்டத்தில் 2021- 2022-ம் ஆண்டில் - ரூ.15,420 கோடி கடன் வழங்க இலக்கு : திட்ட அறிக்கையை கனிமொழி எம்.பி. வெளியிட்டார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021- 2022-ம் ஆண்டில் -  ரூ.15,420 கோடி கடன் வழங்க இலக்கு :  திட்ட அறிக்கையை கனிமொழி எம்.பி. வெளியிட்டார்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021- 2022-ம் நிதியாண்டில் ரூ.15,420 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 2021- 2022-ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதனை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று காரணமாக வங்கியாளர்கள் தங்களது இலக்கை அடைய முடியாத சூழ்நிலை பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இலக்கை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் கடந்த 2020-2021-ம் ஆண்டில் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.12,084 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரூ.14,561 கோடி கடன்வழங்கப்பட்டுள்ளது. இது இலக்கை தாண்டி 120.49 சதவீதமாகும்.

2021- 2022-ம் ஆண்டுக்கான இலக்காக ரூ.15,420 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21.63 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டும் வங்கியாளர்கள் இலங்கை தாண்டி சாதனை படைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in