Published : 30 Sep 2021 07:45 AM
Last Updated : 30 Sep 2021 07:45 AM

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் - நெல் விற்பனைக்கு பதிவு செய்ய புதிய செயலி :

திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனைக்கு பதிவு செய்ய e-DPC என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரிபருவத்தில், அரசு உத்தரவின்படி, இதுவரை 48 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், எதிர்வரும் கொள்முதல் பருவம் 2021-22-ல் விவசாயிகள் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் தேவையின்றிநீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும் எளிதில் பதிவுசெய்து உடனடியாக விற்பனைசெய்யவும் ஏதுவாக தமிழக அரசு e-DPC என்ற புதியசெயலியை அறிமுகம் செய்துள்ளது. இச்செயலியை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in என்ற இணைய தளங்களில் காணலாம்.

இச்செயலியில் விவசாயிகள் தங்கள் பெயர், ஆதார் எண், புல எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலியில் விவசாயிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி பதிவேற்றம் செய்யலாம்.

விவசாயிகள் செயலியில் முன்பதிவு செய்தவுடன் அவ்விவசாயியின் நிலம் இருக்கும் கிராமத்தின் அடிப்படையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இணைய வழியின் மூலமாக கிராம நிர்வாகஅலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

விவசாயிகள் அந்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்.

மேலும், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் e-DPC செயலி குறித்த சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 9444662984, 044-27662417,044-27664016 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x