

கரோனா தடுப்பு கட்டமைப்பில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசனை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட மாணவியைப் பாராட்டி ஐநா பொதுச்செயலாளர் அலுவலகத்தில் இருந்து பாராட்டு கடிதம் வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கலியராயன்விடுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் கவுரி(16). தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், கிராமங்களை மேம்படுத்துவது குறித்து தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வுத் திட்டம் எனும் திட்டத்தை தயாரித்தார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பினார். இதை அரசுகள் செயல்படுத்தாததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மாணவியின் ஆலோசனையை ஏற்று செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடந்த மாதம் உத்தரவிட்டனர்.இந்நிலையில், கரோனா தடுப்பு கட்டமைப்பில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவி செய்வது குறித்து தனது ஆலோசனைகளை ஐ.நா அலுவலகத்துக்கு கடந்த மார்ச் மாதம் கவுரி எழுதி அனுப்பி இருந்தார். ஆக்கப்பூர்வமான கருத்து தெரிவித்திருப்பதாக பாராட்டி மாணவி கவுரிக்கு ஐநா பொதுச்செயலாளர் அலுவலகத்தில் இருந்து தற்போது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக மாணவி கவுரி தெரிவித்தார்.