

பெரம்பலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
தொடர்ந்து, அவரது வகுப்பு மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மேலும் 6 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, ஆட்சியர் அறிவுறுத்தலின்படி அப்பள்ளிக்கு நேற்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோல, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அந்த மாணவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளியில் படிக்கும் 372 மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கு அக்.3-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.