

திருவள்ளூரில் பாதசாரியிடம் வழிப்பறி செய்த நபர்களை துரத்திப் பிடித்த ஆயுதப்படை காவலர் முருகேசனை திருவள்ளூர் எஸ்பி வருண்குமார், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
திருவள்ளூர் - அய்யனார் அவென்யூவை சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். இவர், நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் ஜே.என்.சாலையில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் இமானுவேலின் செல்போன், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது, அவ்வழியாக வந்த திருவள்ளூர் ஆயுதப்படை காவலர் முருகேசன், அந்த நபர்களை துரத்திச் சென்று, ரயில் நிலைய சாலையில் மடக்கினார். அப்போது, அந்த இளைஞர்கள் முருகேசனை தாக்கினர். அவர்களை சமாளித்து, 2 இளைஞர்களை பிடித்து, அவர்கள் பறித்துச் சென்ற செல்போனை கைப்பற்றினார்.
பல வழக்குகளில் தொடர்பு
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கஜேந்திரன், மதன்குமார் ஆகியோரை கைது செய்ததோடு, அவர்களின் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தன்னந்தனியாக செயல்பட்டு குற்றவாளிகளை துரத்திப் பிடித்த காவலர் முருகேசனை, திருவள்ளூர் எஸ்பி வருண்குமார், நேரில் அழைத்து பாராட்டி ரூ.1000 வெகுமதி வழங்கினார்.