Published : 29 Sep 2021 03:23 AM
Last Updated : 29 Sep 2021 03:23 AM

தூத்துக்குடி தாளமுத்துநகர் - தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் :

தூத்துக்குடி தாளமுத்துநகர் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் கொடியேற்றி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம், தாளமுத்துநகர் பங்கு தூய மடு ஜெபமாலை அன்னை ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து அருட்தந்தை ரோலிங்டன் கொடியேற்றி வைத்தார். தட்டார்மடம் பங்குத்தந்தை ஜோசப் ஸ்டாலின் மறையுரை நிகழ்த்தினார். அருட்தந்தையர்கள் ஜேம்ஸ் அமிர்தராஜ். பிபின் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். வரும் அக்டோபர் 7-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வரும் அக்டோபர் 6-ம் தேதி 10-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு அருட்தந்தை ஏ.ஜே.ரெக்ஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. மறைமாவட்ட நூற்றாண்டு விழா பொறுப்பாளர் அருட்தந்தை ஜேம்ஸ் விக்டர் மறையுரை நிகழ்த்துகிறார். அக்டோபர் 7-ம் தேதி 11-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மறைமாவட்ட பொருளாளர் சகாயம் மறையுரை நிகழ்த்துகிறார்.

திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை நெல்சன், உதவி பங்குத் தந்தை பிபின் மற்றும் திருஇருதய சகோதாிகள், ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x