Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

இண்டூர் அருகே இளைஞர் கொலை; ஒருவர் கைது :

இண்டூர் அருகே இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி வட்டம் சோமனஅள்ளி அடுத்த மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (39). இவர் சோமனஅள்ளி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் சிக்கன் ரைஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் மாலை சரஸ்வதி கடையில் இருந்தார். கடையில் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (38), செந்தில் ஆகியோரும் இருந்தனர்.

அப்போது, பேடரஅள்ளி அடுத்த சோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (30) என்பவர் கடைக்கு வந்து விட்டு சென்றார். அவர் வந்து சென்ற சிறிது நேரத்தில் கடையின் பணப்பெட்டியில் இருந்த பணத்தை காணவில்லை.மேலும், பணத்தை சுந்தரம் எடுத்தது தெரிந்தது. இதையடுத்து சுந்தரத்தை அழைத்து சரஸ்வதி விசாரித்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சரஸ்வதிக்கு ஆதரவாக பேசிய அண்ணாதுரையை, சுந்தரம் கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற இண்டூர் போலீஸார் அண்ணாதுரையை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக இண்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அண்ணாதுரையின் சடலத்தை பெற்றுச் சென்ற அவரது உறவினர்கள் தருமபுரி-பென்னாகரம் சாலையில் மல்லாபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற இண்டூர் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதனால், 1 மணி நேரத்துக்கு மேல் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x