Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

சேலத்தில் இன்று 1,11,020 பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு :

சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் இன்று (26-ம் தேதி) நடத்தப்படும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 20 டோஸ் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இன்று கரோனாதடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில், தற்போது கரோனா தடுப்பூசி 1 லட்சத்து 11 ஆயிரத்து 20 டோஸ்கள் கையிருப்பு உள்ளது. இதனடிப்படையில், மாவட்டத்தில், ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், சேலம் மாநகராட்சி பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் ஆயிரத்து 392 மையங்களில் பொதுமக்களுக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் 2-ம் தவணை போடப்படுகிறது. தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளில், தேவைக்கேற்ப முதல், 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

1079 இடங்களில் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 11 லட்சத்து 50 ஆயிரத்தி ற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி கையிருப்பைப் பொறுத்து ஊசி போடப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 ஆயிரத்து 750 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று 3-வது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, 579 இடங்களில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

இதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் 600 இடங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (26-ம் தேதி) காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், 10 ஊராட்சி மற்றும் கிராமப் பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகள் என 600 இடங்களில் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் 379 இடங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 51 சதவீதம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று (26-ம் தேதி) நடைபெற உள்ள தடுப்பூசி திருவிழாவில் 379 முகாம்கள் மூலம், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைத்து தரப்பினரும் ஊசி செலுத்தி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x