Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் மாநகராட்சி தேர்தல் : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து தற்போது உள்ளாட்சி தேர்தல் வந்திருக்கிறது. நான் அமைச்சராக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் கிராமத்தில் ஆக வேண்டிய பணிகளை செய்யக் கூடியவர்கள் தான் பஞ்சாயத்து யூனியனில் உள்ளவர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும்தான். எனவே, அவர்கள் சரியாக இருந்தால் தான் நாம் கொண்டு வருகிற திட்டம் மக்களை சென்றடையும்.

காட்பாடி தொகுதியில் இந்த ஆண்டு செய்ய வேண்டியிருப்பது எல்லா கிராமத்துக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த தொகுதியில் இதுவரையில் ஒரு அரசு கல்லூரி கூட இல்லை. அதை இந்த ஆண்டு கொண்டு வந்திருக்கின்றேன்.

அதேபோன்று, ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வர வேண்டும். அதற்காக, முதற்கட்டமாக இந்த ஆண்டு 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையினை துவங்குவதற்கு சட்டப்பேரவையில் அனுமதி பெற்று இருக்கின்றேன்.

என்னை எப்படி ஆதரித்தீர் களோ, அப்படியே இவர்களை யும் ஆதரியுங்கள். என் கைவாளாக,போர்வாளாக இருக்கக்கூடியவர்கள் தான் இங்கே பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் வேட்பாளர் களாக நிற்கிறார்கள்.

எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் வாள் இல்லாவிட்டால் சண்டையிட முடியாது. ஈட்டி இல்லாவிட்டால் எதிரியை தாக்க முடியாது. அந்த வகையில் அரசின் நலத்திட்டங்கள் நம் தொகுதி மக்களுக்கு உடனே கிடைப்பதற்காக நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

நகரத்தில் இருக்கின்ற கட்சியினர் எல்லா கிராமத்துக்கும் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். காரணம், டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல் வருகிறது. எனவே, கிராமத்து மக்கள் உங்களுக்கு உழைக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலூர் மத்திய மாவட்ட திமுகச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x