

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அக்டோபர் 2-ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளி, கல்லூரிக்கும் 2 பேர் வீதம் மாணவர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
இதில், வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். இதே பரிசுத் தொகை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப் படும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். ராணிப்பேட்டை லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெறும். காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 3 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் போட்டி நடத்தப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.