கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரிப்பு : கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில்பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்துநேற்று முன்தினம் விநாடிக்கு 711 கனஅடியாக அதிகரித்தது.
மழை இல்லாததால், அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 495 கனஅடியாக சரிந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.85 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 400 கனஅடியில் இருந்தது. நேற்று காலை 559 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக் களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறும்போது, அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடிக்கு நீர்வரத்து இருந்தால், பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்வரத்து 495 கனஅடியாக உள்ளதால், சிறிய மதகுகள் வழியாக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது என்றனர்.
பாரூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 156 கனஅடியாக இருந்தது. நேற்று 180 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்துக்காக ஏரியில் இருந்து விநாடிக்கு 50 கனஅடி தண்ணீர் கால்வாய்களில் திறக்கப்பட்டுள்ளது.
