Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

பர்கூர் அருகே கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆய்வு :

பர்கூர் அருகே உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அருகில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஜி.ஆர்.மாதேப்பள்ளி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அமைச்சர் கூறியதாவது:

டாமின் கிரானைட் குவாரிகள் உற்பத்தியினை அதிகரித்து கூடுதல் வருவாய் ஈட்டி அரசுக்கு வருவாயை அதிகரிக்கவும், லாபகரமாக சந்தைப்படுத்தவும் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். டாமின் கிருஷ்ணகிரி கோட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜனஹள்ளி கருப்புக்கல் கிரானைட் குவாரி, செந்தாரப்பள்ளி மற்றும் தட்ரஹள்ளி பல வண்ண கிரானைட் குவாரிகள் லாபகரமாக செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச் சூழல் அனுமதி பெற்று விரைவில் செயல்படுத்தப்படும்.

டிபிஎம் மேக்னசைட்டை மதிப்பு கூட்டி சந்தைபடுத்த ரூ.40 லட்சம் செலவில் கருவிகளும், டியுனைட் கனிமத்தை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த ரூ.25 லட்சம் செலவில் கருவிகள் நிறுவப்பட உள்ளது. இவை வருகிற 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

ஆய்வின் போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, பர்கூர் எம்எல்ஏ மதியழகன், முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், முன்னாள் எம்பி வெற்றிச்செல்வன், சுகவனம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பர்கூர் ஒன்றியக்குழு தலைவர் கவிதாகோவிந்தராசன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x