Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

சேலம் உட்பட 5 மாவட்டங்களில் 123 பதவிக்களுக்கான - உள்ளாட்சி இடைத்தேர்தலில் 488 பேர் மனு தாக்கல் :

சேலம்

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள 123 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் 488 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி பதவிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு நேற்று, ஒரேநாளில் 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும், கிராம ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகளுக்கும் பலர் மனு தாக்கல் செய்தனர். 35 பதவிகளுக்கு மொத்தம் 172 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று ( 23-ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனையும், வேட்புமனுக்களை திரும்பப் பெற 25-ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பார்வையாளர்

சேலம் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பார்வையாளராக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர், உறுப்பினர் செயலர் டி.என்.ஹரிஹரன் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள அரசு கூடுதல் சுற்றுலா மாளிகையில் தங்கி தேர்தல் பணிகளை கண்காணிப்பார். தேர்தல் தொடர்பாக அவரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் அல்லது 94879 35429 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஈரோட்டில் 106 பேர் தாக்கல்

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், இரு ஒன்றிய உறுப்பினர், 4 ஊராட்சித்தலைவர், 20 ஊராட்சி மன்ற உறுப்பினர் என மொத்தம் 27 பதவிகளுக்குத் தேர்தல் நடக்கவுள்ளது. இப்பதவிகளுக்கு, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை என மொத்தம் 106 பேர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நேற்று முன் தினம் வரை 43 மனுக்கள் மட்டுமே தாக்கலான நிலையில், வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாளான நேற்று, 63 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல்லில் 109 பேர் மனு

நாமக்கல் மாவட்டத்தில் தலா 1 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர், 5 கிராம ஊராட்சி தலைவர், 18 கிராம ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 25 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 18 பேர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 12 பேர் என மொத்தம் 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் 66 பேர் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஒன்றியம் வார்டு எண் 30, ஊராட்சித் தலைவர்கள் 3 மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 18 உட்பட 22 பதவிகள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான நேற்று பர்கூர் ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 8 பேர் மனு தாக்கல் செய்தனர். 22 காலி இடங்களுக்கு மொத்தம் 66 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தருமபுரியில் 35 பேர் மனு

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுவின் 18-வது வார்டு உறுப்பினர் காலி இடத்துக்கு 12 வேட்பாளர்களும், குட்லான அள்ளி ஊராட்சி தலைவர் காலியிடத்துக்கு 3 வேட்பாளர்களும், சில்லார அள்ளி உட்பட 12 ஊராட்சிகளில் உள்ள 12 உறுப்பினர் காலியிடங்களுக்கு 20 வேட்பாளர்களும் என மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 இடங்களுக்கு மொத்தம் 35 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x