

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி டி.கே.நகரைச் சேர்ந்தவர் பஸ்லூன் (35). இவரது மகள் முஸ்கான் (18). இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சமீர் (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீர் நேற்று தனது மனைவியுடன் சூளகிரியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.
பின்னர், குடும்பத்துடன் சேர்ந்து சமீர் சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்குச் சென்றார். அணையில் ஓரமாக சமீர் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பஸ்லூன், சமீரை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். சிறிது நேரத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி போலீஸார், மீன்பிடிக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய 2 பேரையும் சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.