

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்திற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கி வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஆட்சியர் அலுவலக பின்புறம் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த அலுவலகம் தொலைவில் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
எனவே, இந்த அலுவலகத்தை மீண்டும் பழைய கட்டிடத்திற்கே இடமாற்றம் செய்ய வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த கட்டிடத்திற்கு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக பணிகள் அனைத்தும் புதிய கட்டிடத்தில் செயல்படும். எனினும், மாற்றுத்திறனாளிகள் மனு, அடையாள அட்டை தொடர்பான பணிகள் அனைத்தும் பழைய கட்டிட தரைத்தளத்திலேயே செயல்படும். மாற்றுத்திறனாளிகள் இந்த அலுவலகத்திற்கு வந்து மனு அளிக்கலாம். புதிய அலுவலகத்திற்கு செல்லத் தேவையில்லை, என்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது மாற்றுத்திறனாளிகள் மத்தி யில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.