Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

சேலம் சீலாவரி ஏரியில் மழை நீர் வடிகால் தூய்மைப்பணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

சேலம் சீலாவரி ஏரியில், மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன் ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், எம்பி.பார்த்திபன், எம்எல்ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

தமிழகத்தில், பருவ மழையின்போது மழை வெள்ளத்தால் ஏற்படும் இடர்பாடுகள், மக்களுக்கு சுகாதார இடர்பாடுகள் ஏற்படாமல் தடுக்க, அனைத்து மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நேற்று (20-ம் தேதி) தொடங்கப்பட்டு, வரும் 25-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில் சேலம் மாநகராட்சி சீலாவரி ஏரியில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாமை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும், நகருக்குள் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் சேலத்தில் 71 இடங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வாய்க்கால் பட்டறை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட வாகனங்களை அமைச்சர்நேரு கொடியசைத்து தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சேலம் ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் பொன்னையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகராட்சியில் மொத்தம் 102 இடங்களில் தூய்மைப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 148 இயந்திரங்கள், 859 தூய்மைப் பணியாளர்கள், 107 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நகருக்குள் வனம்

சேலம் மாநகராட்சியில் 13 இடங்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 278 சதுரஅடி பரப்பில் புங்கன், வேம்பு, பூவரசு, மகாகனி, நாவல், தேக்கு, இளந்தை, மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற 30 வகையான மரங்கள் மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 71 இடங்களில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 460 சதுரஅடி பரப்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x