Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

மாரநேரி அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் - தஞ்சை ஆட்சியரிடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த விவசாயிகள் :

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள மாரநேரி அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதில் சாகுபடி செய்து வந்தவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆட்சியரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பூதலூர் அருகே உள்ள மாரநேரியில் 188 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் 114 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இந்த ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் செப்.18-ம் தேதி அகற்றப்பட்டன. அப்போது, இந்த நிலங்கள் தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட பூமி தான பட்டா நிலங்கள் எனக் கூறி, அவற்றில் சாகுபடி செய்து வந்தவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இவர்களில் சிலரை காவல் துறையினர் பிடித்துச் சென்றதால், மற்றவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 60 பேர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க நேற்று வந்தனர். அப்போது, அவர்கள் கூறியது: நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டி, மேல் முறையீடு செய்துள்ளோம். அதன் தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு அரசு அலுவலர்களிடம் வலியுறுத்தி வந்தோம். இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நிலங்களில் உள்ள சாகுபடி பயிர்கள் அனைத்தும் பொக்லைன் மூலம் அழிக்கப்பட்டதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, ஆட்சியரை சந்தித்து ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வந்துள்ளோம் என்றனர்.

அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால், அலுவலர்களைச் சந்தித்து முறையிட்டனர். இதுதொடர்பாக ஒரு வாரத்தில் குழு அமைத்து ஆய்வு செய்து பதில் அளிக்கிறோம் என அலுவலர்கள் தெரிவித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x