Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

பருவமழை கால இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் - மழைநீர் வடிகால்களை தூர் வாரும் பணிகள் தொடக்கம் : செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது

தஞ்சாவூர்/ திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை/ பெரம்பலூர்/ அரியலூர்/ புதுக்கோட்டை

பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர் வாரி, தூய்மைப்படுத்தும் பணிகள் செப்.20 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகின்றன. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைநீர் வடிகால்களை தூர் வாரும் பணிகள் நேற்று தொடங்கின.

தஞ்சாவூர் மாநகராட்சியில் கரந்தை பகுதியில் நேற்று தொடங்கிய மழைநீர் வடிகால் தூர் வாரும் பணிகளை எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். கூடுதல் ஆட்சியர்கள் என்.ஓ.சுகபுத்ரா, காந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல, கும்பகோணம் நகராட்சியில் உள்ள ஓலைப்பட்டினம் வாய்க்கால் தூர் வாரும் பணியை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் தூர் வாரும் பணியை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாகப்பட்டினம் கடற்கரைச் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்களில் தூய்மைப் பணியை ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் தொடங்கிவைத்தார். மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள கண்ணாரத் தெருவில் நடைபெற்ற தூய்மைப் பணியை ஆட்சியர் லலிதா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூர் வாரும் பணிகளை ஆட்சியர் ப. வெங்கடபிரியா, எம்எல்ஏ ம.பிரபாகரன் ஆகியோர் ரோவர் ஆர்ச் பகுதியில் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூரில் திருச்சி சாலையில் உள்ள கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணிக்கு நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி தலைமை வகித்தார். புதுக்கோட்டை சமத்துவபுரம் ராஜீவ்காந்தி நகர் மற்றும் அறந்தாங்கி அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். இதில், எம்.பி எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x