சேலத்தில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு :
சேலத்தில் நடந்த மாநில அளவிலான சப்-ஜூனியர் சிலம்பம் போட்டியில், 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம், சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து, சேலத்தில் தமிழ்நாடு மாநில சப்-ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியை நேற்று நடத்தின.
தொடக்க நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் ரத்தினகுமார் வரவேற்றார். சேலம் வனப்பாதுகாவலர் பெரியசாமி, தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சிலம்பம் போட்டியைத் தொடங்கி வைத்தார். சேலம், திருச்சி, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து, 11 முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 7 பிரிவுகளாக, நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட, மாநில சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் அங்கு மாணிக்கம், ரவிச்சந்திரன், சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
