Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

பெரியார் ஈவெரா கல்லூரியின் பெயரை - தந்தை பெரியார் கல்லூரி என மாற்ற வேண்டும் : அரசுக்கு கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் கோரிக்கை

திருச்சி

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியின் பெயரை, தந்தை பெரியார் கல்லூரி என மாற்றம் செய்ய வேண்டும் என்று கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, கல்லூரியின் 57-வது ஆண்டு தொடக்க விழா, முன்னாள் மாணவர் சங்கத்தின் 19-ம் ஆண்டு விழா, பல்வேறு விருதுகள் பெற்ற முன்னாள் மாணவர்களை கவுரவிக்கும் விழா, கல்லூரியில் பொன்விழா கண்ட மாணவர்களுக்கு பாராட்டு ஆகிய ஐம்பெரும் விழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் எல்.செல்லப்பா தலைமை வகித்தார். பேராசிரியர் மு.அ.முஸ்தபா கமால், முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.செந்தில்ராஜன், பொருளாளர் கிருஷ்ணகோபால், கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் புரவலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா விழாவைத் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மக்களவை மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், சு.வெங்கடேசன் பேசியது: காலத்துக்குள் பயணிக்க மனிதனுக்கு உள்ள ஒரே வழி நினைவுகள் மட்டுமே.

செல்போனை எடுக்காதே என்ற நிலை மாறி, ஒட்டுமொத்த கல்வியும் செல்போனில் நடைபெறுகிறது. செல்போனையும், கல்வியையும் பிரிக்க முடியாதோ என்ற நிலை உருவாகியுள்ளது. படித்த பள்ளியும், கல்லூரியும் நம் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. இந்தக் கல்லூரியின் வரலாறு மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது என்றார்.

முன்னதாக, பெரியார் ஈவெரா கல்லூரி என்ற பெயரை, தந்தை பெரியார் கல்லூரி என்று மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவையொட்டி, இரா.மாது குழுவினரின் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x