Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

தி.மலை அடுத்த தலவாக்குளம் வார சந்தையில் - தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி : கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே வார சந்தையில் அனுமதிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சி என்ற அறிவிப்பு மூலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. மக்கள் அதிகளவில் கூடுவதால் கடந்த மாதம் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

அணைகள், பூங்காக்களை பார்வையிடவும் மற்றும் நீச்சல் குளங்களை திறக்கவும் வரும் 26-ம் தேதி வரை தடை என்பது கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து நீடிக்கிறது. மேலும், பவுர்ணமி நாளில் அண்ணாமலையை 19-வது மாதங்களாக கிரிவலம் வரவும் மற்றும் பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு உத்தரவுப்படி வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல வாரத்தில் 3 நாட்கள் தடை என்ற உத்தரவும் நீடிக்கிறது.

ஆனால், அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து (வெளி மாவட்டம் உட்பட) வருபவர்கள் பங்கேற்கும் சந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதிக்கவில்லை. முகக்கவசம்அணியாமலும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமலும் மற்றும் போக்குவரத்து சாலை மறித்தும் வார சந்தைகள் நடைபெறுகின்றன. ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை செய்ய வருபவர்கள், அதனை வாங்க வருபவர்கள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், அசைவ உணவு விற்பனையாளர்கள் என பல தரப்பினர் அதிகளவில் கூடுகின்றனர். இதனால், வார சந்தைகள் நடைபெறும் கிராமங்களில் வாழும் மக்கள், கரோனா தொற்று பரவல் அச்சத்துடன் உள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த தலவாக்குளம் கிராமத்தில் நேற்று வார சந்தை நடைபெற்றது. அப்போது, கால்நடைகள் மற்றும் கோழி உள்ளிட்டவற்றை அழைத்து வந்து கிராம மக்கள் கூடினர். மேலும், சாலையோரத்தில் அசைவ உணவு விற்பனையும் களை கட்டியது. அதேபோல், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையும் தடையின்றி தொடர்ந்தது. வார சந்தைக்கு வந்த மக்கள் கூட்டத்தால், விழுப்புரம் – திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிக்கு, வார சந்தைகள் மூலமாக பின்னடைவு ஏற்படும் சூழல் உருவானது.

தண்டோரா மூலம் அறிவிப்பு

இந்நிலையில், வேட்டவலத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்ய சென்ற கூடுதல் ஆட்சியரும், தி.மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான மு.பிரதாப், வார சந்தையில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை அழைத்து, ‘கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே வார சந்தையில் அனுமதிக்க வேண்டும், இதுபோன்று கூட்டம் கூடினால், வார சந்தையை நடத்த அனுமதிக்கக்கூடாது’ என உத்தரவிட்டார்.

மேலும், இது குறித்து ‘தண்டோரா’ மூலம் உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக தண்டோரா போடப்பட்டது. அதற்குள் பெரும்பகுதியான கூட்டம் கலைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, “திருவண்ணாமலை அருகே தலவாக்குளம், போளூர் அருகே கேளூர் உள்ளிட்ட பல இடங்களில் வார சந்தை நடைபெறுகிறது. வார சந்தைகளில் மக்கள் அதிகளவு கூடுவது வாடிக்கையாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது கிடையாது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், அவர்களுக்கு விருப்பம் இல்லை.தி.மலை மாவட்டம் மட்டும் இல்லாமல், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் கிராம மக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.

தலவாக்குளம் வார சந்தைக்குவருபவர்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கூடுதல் ஆட்சியர் உத்தர விட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த உத்தரவை, மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து சந்தை களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். வார சந்தை நடைபெறும் இடத்தில் சிறப்பு முகாம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x