போக்குவரத்து நெருக்கடி தீர புறவழிச் சாலையுடன் - கடலூரில் புதிய பேருந்து நிலையம் வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூ, கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

போக்குவரத்து நெருக்கடி தீர புறவழிச் சாலையுடன் -  கடலூரில் புதிய பேருந்து நிலையம் வேண்டும் :  மார்க்சிஸ்ட் கம்யூ, கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியத்துக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப் பதாவது:

கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக, வடலூர், திட்டக் குடியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக இணைய உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களின் பகுதிகளில் உள்ள ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவி காலத்தை முழுமையாக முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்குள் இணையும் பகுதியில் வரி கடுமை யாக விதிக்கப்படும் என மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் நகரில் நல்ல சுத்தமான தண்ணீர் இரண்டு வேளையும் வழங்க வேண்டும். மாவட்டத் தலைநகரான கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க 2010-ம் ஆண்டு அப்போது துணை முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்.

அனைத்து பிரிவுகளுக்கும் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.கடலூரில் அரசு சட்டக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி உருவாக்கிட வேண்டும்.

கடலூரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புறவழிச்சாலை திட்டத்தை அமலாக்க வேண்டும். நகரில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். தற்போது உள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். கடலூர் சில்வர் பீச்சில் சுற்றுலா தலமாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். கடலூர் தலைமை மருத்துவமனையை நவீனபடுத்த வேண்டும்.

கொண்டங்கி ஏரியைதூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும்.மருத்துவக் கழிவுகள், கழிப்பறைகழிவுகள், மின்னணுக் கழிவுகள் சிப்காட் ரசாயன கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in