

தூத்துக்குடியில் பேருந்துகளில் கரோனா பாதுகாப்பு நெறிமுறை களை கடைபிடிக்காமல் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்தததையடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகளில் பயணம் செய்யும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இந்த விதிகளை யாரும்கண்டுகொள்ளவில்லை. தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கூடமுகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
பேருந்துகளில் கூட்டம்
காவல் துறையினர் இருசக்கர வாகனங்களில் செல்வோரை மட்டுமே ஆங்காங்கே வழிமறித்து அபராதம் விதிக்கின்றனர். பேருந்துகளில் முகக்கவசம் இல்லாமல்பயணிப்பவர்களை கண்டுகொள்வதில்லை.
தொற்று அதிகரிக்கும் அபாயம்
பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பேருந்துகளில் அடிக்கடி சோதனை நடத்தி விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்ற னர்.