கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா : கோவையில் அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தார்
கோவை மாவட்டத்தில் 2400கர்ப்பிணிகளுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 1750 கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம், தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி, கோவை பீளமேடு கண்டியப்பன் சமூக கூடத்தில் நடைபெற்ற விழாவை, உணவுதுறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கிவைத்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் கூறும்போது, “வசதி வாய்ப்பு குறைவால் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடியாதகுடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்காக சமுதாய வளைகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 2,400 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், பூ, வளையல், பழங்கள், இனிப்புகள் மற்றும் ஐந்து வகை சாதங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், கர்ப்ப காலத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பான பிரசவம், கர்ப்ப காலத்தில் உண்ணவேண்டிய சத்தான உணவுகள், தடுப்பூசி, மருத்துவ பரிசோதனை, மருத்துவமனையில் சென்று பிரசவம் பார்த்தல், சீம்பால்மற்றும் தாய்ப்பாலின் மகத்துவம், பாரம்பரிய உணவுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது” என்றார்.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சியில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமைவகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பிரேமா, மீனாகுமாரி ஆகியோர் வரவேற்றனர். தெற்கு ஒன்றியத்தில் 100, வடக்கு ஒன்றியத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய உணவுப் பொருட்கள் கண்காட்சியும் நடைபெற்றது.
திருப்பூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற 100 கர்ப்பிணிகளுக்கும் தாம்பூலத்துடன், பூ, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி நல அலுவலர்பிரதீப் கிருஷ்ணகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர்மரகதம் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டம் முழுவதும் 35 மையங்களில், 1750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டதாக மரகதம் தெரிவித்தார்.
