

ஆரணி அருகே மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் சொந்த கிராமத்தில் பணி வழங்கக்கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி – செய்யாறு சாலையில் பனையூர் கூட்டுச்சாலையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற தொழிலாளர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சி ஆக்கூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அருகாமையில் உள்ள பனையூர் மற்றும் வடக்குமேடு பகுதிகளில் பணி வழங்கப்படுகிறது. இதனால், சுமார் 7 கி.மீ., தொலைவு செல்ல வேண்டி உள்ளது. பணிக்கு ஓரிரு நிமிடங்கள் தாமதமாக சென்றால், பணி வழங்க மறுக்கப்படுகிறது. எங்களது கிராமத்திலேயே பணி வழங்கக்கோரி, ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் ஆரணி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொலைதூரத்துக்கு செல்லும் போது முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” என்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் மற்றும் ஆரணி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சொந்த கிராமத்திலேயே பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.