

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆம்பூரைச் சேர்ந்த முதியவர் நந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தன்(80). இவருடைய நிலத்தை அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை திரும்ப பெறும் முயற்சியில் நந்தனுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது நிலத்தை அபகரித்து விட்டார்கள் என்றும், நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நந்தன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றிய காவலர்கள், ஆபத்தான நிலையில் நந்தனை மீட்டுதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை நந்தன் உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, காவல் துறையினரிடம், தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை சிலர் அபகரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கரும்பூர் கிராம நிர்வாக உதவியாளராக இருந்த பாக்கியலட்சுமியை தாக்கியதாக நந்தன் மீது புகார் உள்ளது. இப்புகாரின் அடிப்படையில் நந்தனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த இருந்தனர்.
இந்நிலையில் தான் நந்தன் தீக்குளித்துள்ளார். அவர் நிலம் அபகரித்து விட்டதாக எழுந்த எழுத்துப்பூர்வ புகார் மனு ஏதும் இதுவரை அளிக்கவில்லை. இதையடுத்து, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.