

வேலூர் அருகே அபகரித்த விவசாய நிலத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி மனு அளித்த முதியோருக்கு உதவித் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
வேலூர் அடுத்த பென்னாத்தூர் குளத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (85). இவருடைய மனைவி பாஞ்சாலி (70). இவர்கள், இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை காத்திருந்தனர். அப்போது, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வந்ததும் அவரிடம் அளித்த மனுவில், ‘‘தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொண்டார். தற்போது எங்கள் நிலத்தில் நிலக்கடலை, நெல், சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளோம். எங்களது ஒரே மகன் உயிரிழந்து விட்டதால் எங்களை ஏமாற்றி சொத்தை பறிக்க முயற்சி செய்துள்ளார். அந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாரிப்பதாக தெரிவித் ததுடன் முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? என ஆட்சியர் கேட்டறிந்தார். தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பரிந்துரை செய்தார்.