தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் - 2,691 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் -  2,691 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :
Updated on
1 min read

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2,691 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

தமிழகம் முழுவதும் நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,234 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், கல்லுகுளம் ஆரம்ப சுகாதார நிலையம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களை மேலிட பார்வையாளரான ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்டம் முழுவதும் 1.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை வரை 1.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. திருவாரூர் புதிய பேருந்துநிலையம், முதலியார் தெரு, பழைய பேருந்து நிலையம், திருவாரூர் வட்டம் புலிவலம், குடவாசல் வட்டம் மூலங்குடி, குடவாசல் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 63,200 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மாலை வரை 51,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

எட்டப்பட்ட இலக்கு

பின்னர், ஆட்சியர் கூறியபோது, “நாகை மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 31,439 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, இலக்கு எட்டப்பட்டுள்ளது” என்றார்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 499 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. குத்தாலம் வட்டம் வானாதிராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் ரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர், அவர் கூறியபோது, “மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 43,340 தடுப்பூசி ஊசிகளே இருப்பு இருந்தன. அவை மதியம் 2 மணிக்குள் தீர்ந்துவிட்டன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in