

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (செப். 12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஒரேநாளில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநகர் உட்பட மாவட்டம் முழுவதும் இதற்காக 769 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். அரசு மருத்துவ மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 138 இடங்களில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கருவம்பாளையம், ராஜ வீதி மற்றும் நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து தடுப்பூசி முகாம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவர் கூறும்போது, “மாநகரில் 55 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
காங்கயம்
சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கல்லேரி, மறவபாளையம், படியூர், சிவன்மலை ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகள், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், சிவன்மலை மினி கிளினிக் மற்றும் 2 வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நத்தக்காடையூர், மருதுறை, பரஞ்சேர்வழி, பழையகோட்டை ஆகிய கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையம், பழையகோட்டை மினி கிளினிக் ஆகிய இடங்களிலும், பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பாப்பினி, வீரணம்பாளையம், பொத்தியபாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் வாகனம் மூலமாகவும், காங்கயம் சத்யா நகர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட புலிக்கல்மேடு, புலிமா நகர், களிமேடு ஆகிய பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், காங்கயம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
உடுமலை
மடத்துக்குளம் ஒன்றியத்தில் மடத்துக்குளம், கணியூர், கடத்தூர் உள்ளிட்ட 37 மையங்கள்.
உடுமலை ஒன்றியத்தில் தளி, எரிசனம்பட்டி, ஜல்லிபட்டி, பள்ளப்பாளையம், ராவணாபுரம், போடிபட்டி உள்ளிட்ட 52 மையங்கள்.
குடிமங்கலம் ஒன்றியத்தில் குடிமங்கலம், பெதப்பம்பட்டி, மசக்கவுண்டன்புதூர், முத்து சமுத்திரம், குமாரபாளையம், லிங்கம்மாவூர், உள்ளிட்ட 27 மையங்கள்.
தாராபுரம் ஒன்றியத்தில் அலங்கியம், தாசநாயக்கன்பட்டி, கவுண்டச்சிபுதூர், நாட்டுக்கல்பாளையம், சின்னக்காம்பாளையம், வீராச்சி மங்கலம், தளவாய் பட்டணம் உள்ளிட்ட 35 மையங்கள்.
குண்டடம் ஒன்றியத்தில் ஈஸ்வர செட்டிபாளையம், குண்டடம், முத்துகவுண்டம்பாளையம், தாயம்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 40 மையங்கள்.
மூலனூர் ஒன்றியத்தில் மூலனூர், கன்னிவாடி, தாளையூர், தூரம்பாடி, வடுகப்பட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட 30 மையங்கள். இம்மையங்களில் தலா 450 தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட ரோட்டரி பள்ளி, பூங்கா பள்ளி, நகராட்சி அலுவலகம், நகராட்சி திருமண மண்டபம் உட்பட 8 இடங்களில் தலா 200 தடுப்பூசிகள் போடவும், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், கொழிஞ்சிவாடி, கோட்டைமேடு, காமராஜபுரம், ஜின்னா மைதானம் உட்பட 10 இடங்களில் தலா 100 தடுப்பூசிகள் போடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் 400 பேருக்கும், நடமாடும் மருத்துவக் குழு மூலம் தலா 400 பேருக்கும் தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 30 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 295 தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.