Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

நிபா வைரஸ் பரவலை தடுக்க - சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு :

நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ்பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயதுசிறுவன் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தான்.

இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாவட்ட எல்லையில் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி ஆகியோரின் அறிவுரைப்படி கேரளாவில் இருந்து வருபவர்களை சுகாதாரத் துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.

இதுதவிர கப்பாலா அரசு ஆரம்பசுகாதார நிலையத்தின் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் தாளூர் சோதனைச்சாவடியில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தாமல், நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோருக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தாளூர் சோதனைச்சாவடியில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் ஆய்வு நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நிபா வைரஸ் தொடர்பாக தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி, நீலகிரி மாவட்டத்தில் முழுவீச்சில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிமோனியா போன்ற காய்ச்சல்அறிகுறிகளுடன் வருபவர்கள், மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவோர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். நீலகிரிமாவட்டத்தில் 98% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருப்பூரில் சிறப்புக்குழு

நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல்கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென தனிக்குழுவையும் மாவட்ட சுகாதாரத் துறையினர் அமைத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையினர் கூறும்போது,‘‘திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை -கேரளாவை இணைக்கும் ஒன்பதாறு(சின்னாறு) சோதனைச் சாவடியில்கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதோடு மாவட்டத்தில், நிபா வைரஸ் பரவாமல் தடுக்க ஒரு சிறப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர், கேரளாவில் இருந்து ஒன்பதாறுசோதனைச்சாவடி வழியாக வருவோர் குறித்த விவரங்களை தனிப்பதிவேடு மூலமாக பதிவு செய்து வருகின்றனர். தேவைப்படுவோருக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று உள்ளிட்ட தகவல்களையும் சேகரிக்கின்றனர்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x