Published : 09 Sep 2021 03:16 AM
Last Updated : 09 Sep 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 3 ஏரிகள் முழுமை யாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஓரிரு நாளில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடிஆம்பூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலமாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளன. கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளம் அருகே உள்ள ஏரிகளுக்கு சென்றடைகின்றன. இதனால், 49 ஏரிகளில் தற்போது 3 ஏரிகள் நிரம்பி உள்ளன.
திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஏரி, ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஏரி, வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு ஏரி என 3 ஏரிகள் நிறைந்து உபரிநீர் வெளியேறி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் சென்றடைகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் தருவாயில் இருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் குமார் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளும் உலக வங்கியின் மூலம் ரூ. 3 கோடியே 85 லட்சம் மதிப்பில் கரை பலப்படுத்தும் பணிகள், கால்வாய் தூர்வாரும் பணிகள், கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் சீராக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், தற்போது மாவட்டத்தில் 3 ஏரிகள் நிறைந்துள்ளன. தொடர்ந்து மழை பெய் தால் ஓரிரு நாட்களில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்ப வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, குரும்பேரி ஏரி, ஏலகிரி மலை ஏரி, சிம்ம புதூர் ஏரி, மாடப்பள்ளி ஏரி, திருப்பத்தூர் பெரிய ஏரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் 90 சதவீதம் நிரம்பியுள்ளன.
ஒரு சில நாட்களுக்குள் இந்த ஏரிகள் நிரம்பும் என எதிர் பார்க்கிறோம். இந்த ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறினால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். மேலும், அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT