Published : 08 Sep 2021 03:16 AM
Last Updated : 08 Sep 2021 03:16 AM

நீலகிரியில் ‘ட்ரோன்’பயன்படுத்த முன்அனுமதி பெறவேண்டும் : மாவட்ட ஆட்சியர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயம் முன் அனுமதி பெறவேண்டும் எனமாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கோடநாடு எஸ்டேட்டை சுற்றிதொடர்ந்து 3 நாட்கள் ட்ரோன் பறந்ததாக, கோடநாடு எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன், சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சோலூர்மட்டம் போலீஸார் விசாரித்ததில், அரசு கேபிள் நிறுவனம் ட்ரோன் இயக்கியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவன ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் திருமணம், காதணி விழா, பெயர் சூட்டு விழா, நீராட்டுவிழா மற்றும் சமயம் தொடர்புடைய விழாக்களில் புகைப்படங்கள் எடுப்பதற்காக உள்ளரங்க பறக்கும் புகைப்படக்கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி உபயோகிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளில்லா பறக்கும் கருவிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில முக்கிய தருணங்களில் மட்டும் பறக்கும் புகைப்படக் கருவிகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முன்அனுமதி பெறவேண்டும். விதிமீறி பயன்படுத்தப்படும் கருவிகள், பறிமுதல்செய்யப்படுவதுடன் உரிய சட்டவிதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x