ஆசியாவிலேயே மிகப் பெரிய புலியகுளம் முந்தி விநாயகர் :

ஆசியாவிலேயே மிகப் பெரிய புலியகுளம் முந்தி விநாயகர்  :
Updated on
2 min read

விநாயகர் சதுர்த்தி விழா உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கு நாடு இந்த கொண்டாட்டங்கள் வேறுபட்டாலும் விநாயகரை அன்றைய தினம் வழிபட வேண்டும் என்ற நோக்கம் ஒன்றுதான்.

விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என அர்த்தம் கொள்ளப்படும். ‘வி’ என்றால் மேலான என்றும் நாயகர் என்றால் தலைவர் என்றும், அதாவது தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்களை உடையவர் என்றும் அர்த்தம் கொள்ளப்படும்.‘கணபதி’ என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே அடங்கியுள்ளது. உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் சதுர்த்தி தினங்களில், விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடக்கும். அந்த வகையில், கோவையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான, புலியகுளம் அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு பக்தர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. விநாயகர் சதுர்த்தி தினத்தில், சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இதுகுறித்து புலியகுளம் முந்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள், பூசாரிகள் கூறியதாவது : புலியகுளம் பகுதியை மையப்படுத்தி அமைந்துள்ள இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கோயிலின் வளாகத்தில் அரச மரத்தடியில், ஆதி மூல விநாயகர் சிலை உள்ளது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதைத் தொடர்ந்து, மக்கள் மனதில் என்றும் இருக்கும் வகையில் பெரிய விநாயகர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஒரே கல்லினால், பிரமாண்டமாக விநாயகர் சிலையை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டு, பிரத்யேகக் கல் தேர்வு செய்யப்பட்டது. ​அதில் பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கல் புலியகுளத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கோயில் உள்ள இந்த இடத்தில் வைத்து, சிலையை முழுமையாக வடிவமைக்கும் பணிகள் கடந்த 1990-களின் இறுதியில் மேற்கொள்ளப்பட்டது. சில ஆண்டு பணிகளுக்கு பின்னர், 190 டன் எடை அளவில், 19 அடி உயரத்தில் பிரமாண்டமாக முந்தி விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.

கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆசியாவிலேயே, ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப் பெரிய விநாயகர் சிலை என்ற பெருமையை புலியகுளம் முந்தி விநாயகர் கோயில் சிலை பெற்றுள்ளது. தினமும் ஏராளமான மக்கள் வந்து, விநாயகரை தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக, விழா நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர். விநாயகர் சதுர்த்தியன்று, இங்கு நடக்கும் பூஜைகளும் மிகவும் விசேஷமானது. விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் மாலையிலே யாகவேள்வி தொடங்கி விடும். மறுநாள் அதிகாலை 2-ம் நாள் யாகவேள்வி நடக்கும். அதைத் தொடர்ந்து 11 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடத்தப்படும். பின்னர், ஒன்றரை டன் மலர்களை கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்படும். விநாயகர் சதுர்த்தியன்று, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு இவர் காட்சி தருவது பார்க்க சிறப்பாக இருக்கும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனமுருகி வேண்டி, வணங்கினால் புலியகுளம் முந்தி விநாயகர் நிச்சயம் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

படம் விளக்கம் :

கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி தரும் புலியகுளம் முந்தி விநாயகர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in