

கள்ளக்குறிச்சியை அடுத்த மோகூர் கிராமத்தில் சுடுகாட்டுக்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் நேற்று தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மோகூர் கிராமத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதுகுறித்து அக்கிராம மக்கள் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை மனு அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, சாக்கடையாக மாறியுள்ளது. இதனால் உயிரிழப்பவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மோகூர் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கச்சிராயப்பாளையத்திலிருந்து மோகூர் வழியாக கள்ளக்குறிச்சி சென்ற தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.