Published : 07 Sep 2021 03:15 AM
Last Updated : 07 Sep 2021 03:15 AM

குறுவை சாகுபடிக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும் : தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர்

சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிருக்கு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் நேற்று தஞ்சாவூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாரன் தலைமையில் நேற்று விவசாயிகள் தஞ்சாவூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

மனுவில் தெரிவித்துள்ளது: கடந்தாண்டு சம்பா சாகுபடியின்போது நெற்பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்திருந்தோம். ஆனால், மகசூலில் இழப்பு ஏற்பட்ட நிலையில் இதுவரை காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே, அந்த இழப்பீட்டுத் தொகையை உடன் வழங்க வேண்டும்.

அதேபோல, தற்போது குறுவை சாகுபடிக்கு காப்பீடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை, உடனடியாக குறுவைக்கு காப்பீடு திட்டம் அறிவிக்க வேண்டும்.

தற்போது, விவசாயிகள் தனியார் நிதி நிறுவனங்களிடமும், பிறரிடமும் வட்டிக்கு பணம் வாங்கி குறுவை சாகுபடி நடவு பணியை மேற்கொண்டுள்ள நிலையில், குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு உடனடியாக கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டப விவகாரம்

கீழ்வேங்கைநாட்டினர் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது: ஒரத்தநாடு அருகே கீழ்வேங்கை நாட்டுக்குட்பட்ட பருத்தியப்பர்கோவில் கிராமத்தில் பாஸ்கரேஸ்வரர் கோயில் அருகே ரூ.1.77 கோடி செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபம், கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.

ஆனால், திருமண மண்டபத்தை ஊராட்சி மன்றத் தலைவரே நிர்வகிப்பதாக கூறி, இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி, திருமண மண்டபத்துக்கு பூட்டுப் போட்டுள்ளார். திருமண மண்டபம் ஏற்கெனவே இருந்தபோது, கோயில் நிர்வாகத்திடம் இருந்தது. புதுப்பிக்கப்பட்ட பின் இந்த மண்டபம் இதுவரை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதனால், கோயிலில் திருமணங்கள் போன்ற விழாக்கள் நடத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, திருமண மண்டபத்தை கோயில் நிர்வாகத்திடம் உடன் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x