Published : 07 Sep 2021 03:15 AM
Last Updated : 07 Sep 2021 03:15 AM

வேலூர் மாவட்டத்தில் - ‘நீட்' தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை : ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது

‘நீட்’ தேர்வு நடத்துவற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

மருத்துவப் படிப்பில் சேரு வதற்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 2 மையங்கள், வேலூர் மாவட்டத்தில் 12 மையங்கள் என மொத்தம் 16 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெறவுள்ளது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 600 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,800 பேர், வேலூர் மாவட்டத்தில் 6,272 மாணவர்கள் என 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி ‘நீட்’ தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூர் விஐடி பல்கலைக்கழகம், சிருஷ்டி மேல்நிலைப்பள்ளி, கிங்ஸ்டன் பள்ளி, சன்பீம் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி சிபிஎஸ்இ பள்ளி, டிகேஎம் மகளிர் கல்லூரி, அரியூர் ஸ்பார்க் பள்ளி, நாராயணி பள்ளி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி என 12 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது.

தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் மாணவர்களின் பதிவு எண் மேஜையில் ஒட்டப்படும். 10 மாணவர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்து 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 1.40 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கரோனா பரவல் காரணமாக தேர்வு மையங்களில் பாதுகாப்புவிதிமுறைகள் கடைப்பிடிக்கப் படும். காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட் டால் அந்த மாணவர்கள் தனி அறை யில் அமர வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 5 முதல் 7 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள். மாணவிகளின் பாதுகாப்பு கருதி பெண் காவலர்களும் பாதுகாப்புப்பணியில் இருப்பார்கள். வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு செல்ல ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு வர அனுமதியில்லை’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x