தரம் உயர்த்தப்படவுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் - பழங்கரை ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு :

தரம் உயர்த்தப்படவுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியுடன்  -  பழங்கரை ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ள திருமுருகன்பூண்டியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது மற்றும் பழங்கரை ஊராட்சியை திருமுருகன் பூண்டி நகராட்சியுடன் இணைப்பது தொடர்பான விளக்கக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் அவிநாசி பெருமாநல்லூர்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசிய தாவது:

திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஊராட்சிப் பகுதிகளை நகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் அணுகு சாலைகள், இணைப்பு சாலைகள் மற்றும் உள் சாலைகள் போன்ற அனைத்து சாலை வசதிகளும், போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயம் செய்த தரத்துக்குஇணையாக உருவாக்கப்படும். நகராட்சி விதிகள்படி இரட்டை அகல சாலைகளுக்கு 30 மீட்டர்இடைவெளியில் தெருவிளக்கு அமைக்கப்படும். ஏற்கெனவே வாரச்சந்தை இருப்பினும், இல்லாவிட்டாலும் தினசரி சந்தை அமைத்துத் தரப்படும்.

அனைத்து பள்ளிகளும் நகராட்சி திட்டங்களுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்படும். கடைகள், காத்திருப்பு அறை மற்றும் பொதுக்கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த நிரந்தர பேருந்து நிலையம் அமைத்துதரப்படும். இவற்றோடு, ஆரம்ப சுகாதார நிலையம், பொது சுகாதாரத்துக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு சுகாதார அலுவலர், ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். சுகாதாரம், தூய்மைப் பணி, கழிவுகள் அகற்றம் என அனைத்து அடிப்படை வசதிகளின் தரம் மேம்படும். இந்தநடவடிக்கைகளால் நகரின்சுற்றுப்புறச்சூழல் மேம்படுத்தப்பட்டு, தூய்மையான சுகாதார சூழல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

முன்னதாக கூட்டத்துக்கு வரும்போது பழங்கரை ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் எனவலியுறுத்தி அனைவரும் கையில்பதாகைகளுடன் வந்தது, குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் பேரூராட்சியாக உள்ள திருமுருகன்பூண்டியை தரம்உயர்த்த பொதுமக்கள் பலர் ஆதரவு தெரிவித்து பேசினர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை மனுக்களாக அளிக்க அறிவுறுத்தப்பட்டது. அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in