Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி - பொது இடங்களில் சிலைகள் நிறுவினால் கடும் நடவடிக்கை : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக, பொது இடங்களில் சிலைகளைநிறுவுவது அல்லது பொதுஇடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இதை மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ள சமயவிழாக்களின்போது கடைபிடிக்க வேண்டிய வேண்டிய அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுநெறிமுறைகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாதொற்று பரவலை தடுக்கும்வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலைகள் நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதிமறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை. தனி நபர், தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபராகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும், ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ சிலைகளை வைத்துச்செல்லவும் அனுமதிக்கப்படும். இந்த அனுமதி, அமைப்புகளுக்கு பொருந்தாது. தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கரோனா தொற்று பரவாமல் தடுக்க, தமிழக அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை தொடர்புடைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், தாராபுரம் சார்-ஆட்சியர் ஆனந்த்மோகன், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, கோட்டாட்சியர்கள் ஜெகநாதன், கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றோர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x