Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM

சத்குரு பிறந்தநாளையொட்டி 1.23 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள் :

சத்குரு பிறந்தநாளையொட்டி, மரக்கன்றுகளை நடவு செய்த விவசாயிகள்.

கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பிறந்த நாள் மற்றும் நதிகள் மீட்பு இயக்கம், காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 3 -ம் தேதியை ‘நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக’ விவசாயிகள் கொண்டாடினர். இதையொட்டி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தருமபுரி, சேலம், விருது நகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 485 ஏக்கர் நிலப்பரப்பில் 1.23 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறும் போது,‘‘விவசாயிகளுக்கு பணப் பயன் தரக்கூடிய மண்ணுக்கேற்ற மரங்களான தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மலைவேம்பு, குமிழ் தேக்கு, கருமருது, மகாகனி போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டன. இதில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியாளர்கள் வழங்கினர்” என்றார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது,‘‘ மரங்கள் மூலம் மண்ணின் வளம் மேம்பட்டு ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும். இது தொடர்பாக பெருமைப்படுகிறோம். சத்குருவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர். மேலும், சத்குருவுக்கு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாக ஈஷா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x