கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த -  9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் நிதி உதவி :

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த - 9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் நிதி உதவி :

Published on

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 9 குழந்தைகளுக்கு, நிவாரண நிதி உதவியை ஆட்சியர் வழங்கினார்.

கரோனா தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்தை குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி, தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்திருந்தால் நிவாரண நிதி ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும், பெற்றோர்களை இழந்து உறவினர்களுடன் அல்லது பாதுகாவலர்களின் பாதுகாப்பில் வாழும் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் வீதம்18 வயது முடியும் வரை பராமரிப்பு தொகை வழங்கவும், அரசு இல்லங்களில் முன்னுரிமை, கல்வி, விடுதி செலவுகள் பட்டப்படிப்பு முடித்து வரும் வரையும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம், கரோனா தொற்றினால் பெற்றோர் ஒருவரை இழந்த 4 குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் தமிழக அரசு மூலம் நேரடியாக வழங்கி, அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் சு.வினீத், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த 9 குழந்தைகளுக்கு, தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.45 லட்சம் வழங்கினார். இந்த நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் நன்னடத்தை அலுவலர் நித்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளில் திருப்பூர் தான் முதலிடத்தில் உள்ளது. கணியூர், தாராபுரம், குன்னத்தூர், பூலுவபட்டி, வெள்ளிரவெளி, கோயில்வழி, காதர்பேட்டை, மங்கலம், பிச்சம் பாளையம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று பாதித்து, பெற்றோர் இருவரையும் இழந்து மொத்தம்20 குழந்தைகள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனனர். இவர்கள் வரும் நாட்களில், இந்த திட்டங்களில் பயன்பெறுவார்கள், என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in