Published : 03 Sep 2021 03:15 AM
Last Updated : 03 Sep 2021 03:15 AM

நீலகிரியில் தடுப்பூசி சான்று இருந்தால் மட்டுமே மது :

நீலகிரி மாவட்டத்தில் மது வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை மற்றும் தடுப்பூசி சான்றை காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 76 மதுக்கடைகள் இயங்குகின்றன. இம்மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மது விற்பனையாகிறது. பண்டிகை காலம் மற்றும் கோடை சீசன் காலத்தில் மது விற்பனை இரட்டிப்பாகும். குளிர் பிரதேசம் மற்றும் சுற்றுலாதலம்என்பதால் நீலகிரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகம்.

இந்நிலையில், தற்போது நீலகிரிமாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்க செல்வோர் ஆதார் அட்டை மற்றும் கரோனா தடுப்பூசி சான்றை காண்பிக்க வேண்டும். இந்த சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே இந்த நடைமுறை முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் மது வாங்க வரும் நபர்கள் கரோனா தடுப்பூசி செலுத்த முற்படுவார்கள் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, "மக்களிடம் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம்தடுப்பூசி சான்றை காண்பித்து மது வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு வரும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்வர்" என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி 100 சதவீதம் நிறைவடையும் நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 5.82 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 70 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. மது வாங்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நடைமுறையால் மதுப் பிரியர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள், இதனால், தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x