

சிவகங்கை மாவட்டம், ஏரியூர் அருகே ஓராண்டுக்கு மேலாக 30 குடும்பங்கள் இருட்டில் வசிக்கின்றனர்.
சிங்கம்புணரியில் 20 ஆண்டு களுக்கும் மேலாக சர்க்கஸ் தொழி லாளர்கள் வசித்து வந்தனர். அங்கு இடநெருக்கடியால் ஓராண்டுக்கு முன்பு, ஏரியூர் அருகே எம்.வலையாபட்டி அம்மன் நகரில் குடியேறினர்.
தற்போது அப்பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் அவர்கள் 3 கி.மீ. நடந்து சென்று பக்கத்து கிராமங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி இல்லை. இதனால் ஓராண்டுக்கும் மேலாக இருட்டில் வாழ்கின்றனர்.
இதுகுறித்து சர்க்கஸ் தொழி லாளர்கள் சுரேஷ், ரமேஷ் கூறியதாவது: நாங்கள் 20 ஆண்டுகளாக சிங்கம்புணரியில் வசித்து வந்தோம். அங்கு இடவசதி இல்லாததால் எங்களுக்கு இப்பகுதியில் இடம் கொடுத்தனர். ஆனால், எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. மொபைல் போன், ரேடியோ இயக்குவதற்கு சோலார் பேனல்களை பயன் படுத்துகிறோம். மழை நேரங்களில் பக்கத்தில் உள்ள ஓடையில் இருந்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் புகுகிறது. மேலும் வீடுகளும் ஒழுகுகின்றன. இரவு நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகளுடன் அச்சத்தில் உள்ளோம், என்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாவட்ட ஆட்சியர் உத்தரவில் அவர்களுக்கு மனையிடம் வழங்கியுள்ளோம். விரைவில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.