வெளிநாட்டுப் பணிகளுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் :

வெளிநாட்டுப் பணிகளுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் வெளிநாட்டுப் பணிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவத்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் திறனுடைய, திறனற்ற பணியாளர்கள் பணியமர்த்தம் செய்யப் பட்டுள்ளனர். வெளிநாட்டில் பணி வழங்கும் நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட திறன் உள்ள வேலைநாடுநர்களையே தேர்வு செய்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 500 செவிலியர்களுக்கு ஓஇடி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளம் வருடத்திற்கு ரூ.18 லட்சம். இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கில் செவிலியர்களை தேர்வு செய்யும் ஹெல்த் எஜூகேசன் இங்கிலாந்து நிறுவனத்துடன், வீட்டுப் பணியாளர்களை தேர்வு செய்யும் ஏஐ டோரா மேன்பவர் குவைத் நாட்டுடன் மற்றும் இந்தியா டிரேட் எக்ஸ்பிஷன் என்கிற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் https://www.omcmanpower.com/ என்கிற இணையதளத்தை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். படித்த, வெளிநாட்டுப் பணிகள் தேடும் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in