Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் பணியாற் றும் தொழிலாளர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அந்த நிறுவனங்களுக்கு ‘சீல்' வைக்கப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இது தொடர்பாக அரசு கூறும் அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டைகளை எப்போதும் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள் தினசரி ஆய்வுக்கு சென்று ஆதார் எண்ணை பரிசோதனை செய்து அந்த தொழிலாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாத தொழிலாளர்களுக்கு அங்கேயே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடாமல் தொழிலாளர்கள் கடைகளில் பணியாற்றுவது தெரியவந்தால் அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் என 41 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர 167 நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று கரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்பூர், வாணியம்பாடிபகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 10 மருத்துவக்குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், துணை ஆட்சியர்கள் கிருஷ்ணமூர்த்தி, பானுமதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT