

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் விநாயகம் (32). திருப்பூர்சூசையாபுரத்தில் தங்கி, திருப்பூர் மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஓடக்காடு லிங்க கவுண்டன் வீதியில் விநாயகம் நின்றிருந்தார். அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் அவர் உயிரிழந்தார். தகவலின்பேரில் அங்கு வந்த திருப்பூர் வடக்குபோலீஸார் விசாரித்தனர். இவ்வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது ‘‘விநாயகத்துக்கும், அப்பகுதியை சேர்ந்த விஷ்வா, கார்த்தி ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்தி, விஷ்வா மற்றும் நண்பர் சிவா ஆகியோர் விநாயகத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர் சூசையாபுரத்தை சேர்ந்த சிவா (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் சரணடைந் துள்ளனர்’’ என்றனர்.