பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா தொடக்கம் : இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கொடி யேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கியது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவை பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை 9 மணிக்கு கொடி மரம் அருகே உற்சவர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 11.15 மணிக்கு பிச்சை குருக்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. விழாக் காலங்களில் பக்தர்கள் வர தடை விதிக்கப் பட்டுள்ளதால், அனைத்து நிகழ்ச்சிகளும் இணைய வாயிலாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது. விழா ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி அ.ராமசாமி, வலையபட்டி மு.நாகப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
